கால்பந்து மீதான கேரளாவின் மோகம் நூற்றாண்டுகளை கடந்தது. சர்வதேச போட்டியாக இருந்தாலும் சரி...உள்ளூரில் பிரபலமான 7 பேர் போட்டியாக இருந்தாலும் சரி...பந்தை உதைக்க தொடங்கியவுடன் உற்சாகம் பொங்கி வழியத் தொடங்கிவிடும்.

பிரிட்டிஷ் சிப்பாய்கள், மிஷனரியினர் காலத்திலேயே கேரளத்தில் கால்பந்து காதலர்கள் அதிகம். பிற மாநிலங்களில் கிரிக்கெட் கோலோச்சியபோதும் கேரளத்தில் கால்பந்தே கடவுள். கால்பந்தில் கேரளா பெற்ற கவுரவங்கள் ஏராளம். இங்குள்ள பல கிளப்புகள் கால்பந்தில் முத்திரை பதித்தவை. கால்பந்து வீரர்கள் பெயர்கள் வீடுகள் தோறும் பிரபலம். 2014ல் கேரளா பிளாஸ்டர்ஸ் உருவெடுக்கும்வரை அம்மாநில கிளப் கால்பந்தில் நீண்ட இடைவெளி இருந்தது.

இக்கால கட்டத்தில் அங்கு சில கிளப்புகள் உருவானாலும் அவை தாக்குப்பிடிக்கும் நிலையில் இல்லை.

கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்ஸி உருவான ஐந்தாண்டுகளில் அந்த அணி தொடர்ந்து வலிமை பெற்று வருகிறது. தற்போது ஆசியாவில் அதிக ரசிகர்கள் ஆதரவு பெற்ற கால்பந்து கிளப்புகளில் ஒன்றாக திகழ்கிறது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டுவிட்டர் என சமூக தளங்களில் தலா 10 லட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் கேரளா பிளாஸ்டர்ஸை பின் தொடர்கிறார்கள். சமூக தளங்களில் உலகில் அதிகம் பின் தொடரப்படும் 100 கால்பந்து கிளப்புகளில் தெற்காசியாவிலிருந்து இடம்பெற்றுள்ள ஒரே கிளப் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப் ஸி மட்டுமே. ஆசியாவில்

டிஜிட்டல் தளங்களில் அதிகம் பேரால் பின் தொடரப்படும் கால்பந்து கிளப்புகளில் கேரளா பிளாஸ்டர்ஸ் 10ம் இடம் வகிக்கிறது. இந்த அணியை 43 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். லாஸ் ஏஞ்சல்ஸ் கேலக்ஸி(41 லட்சம்), கெல்டிக் எஃப்ஸி(31 லட்சம்), கஷிமா ஆன்ட்லர்ஸ்(5 லட்சம்) விட ஆன்லைன் ரசிகர்கள் ஆதரவில் பிளாஸ்டர்ஸ் முன்னணி வகிக்கிறது. கேரளா பிளாஸ்டர்ஸின் சொந்த மைதானமான கொச்சி நேரு ஸ்டேடியத்தில் அதற்கு கிடைக்கும் ஆதரவு மகத்தானது. முதல் 2 ஆண்டுகளில் களத்தில் 60,000 பேரின் கிடைத்தது. அடுத்த ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மைதான இருக்கைகள் 40ஆயிரமாக குறைக்கப்பட்டதால் அதற்கேற்ப ஆதரவு இருந்தது. ஹீரோ சூப்பர் லீக்கில் கேரளா பிளாஸ்டர்சுக்கு கிடைத்த ஆதரவு பிற அணிகளை பொறாமைப்பட வைக்கும் வகையில் அமைந்தது எனலாம்.

'கொச்சியில் கேரளா பிளாஸ்டர்ஸ் ஆடும்போது கிடைக்கும் ரசிகர்கள் ஆதரவு அந்த அணியில் கூடுதலாக ஒரு வீரர் இடம் பெற்றதற்கு சமானம் என்றும் இது எதிரணிகளுக்கு கடினமாக அமைந்து விடுகிறது' என்றும் கூறுகிறார் அதன் பயிற்சியாளர் ஈல்கோ ஷட்டோரி. இவர் நார்த் ஈஸ்ட் அணி பயிற்சியாளராகவிருந்து பின் கேரளா பிளாஸ்டர்ஸ் பக்கம் மாறினார்.

கேரளா பிளாஸ்டர்ஸ் ஐஎஸ்எல் கோப்பை வென்றதில்லை என்பது அதன் ஒரே குறை. எனினும் அந்த அணி 2 முறை கோப்பையை மிகவும் நெருங்கிவிட்டது. 2014, 2016ம் ஆண்டுகளில் ஏடிகே அணியிடம் இறுதிப்போட்டியில் தோற்றது கேரளா பிளாஸ்டர்ஸ். கடைசி 2 சீசன்களில் அந்த அணி ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறவில்லை. எனினும் ஷட்டோரியை தலைமை பயிற்சியாளராக்கியதும் சில மிக நல்ல வீரர்களை அணியில் சேர்த்துள்ளதும் பிளாஸ்டர்ஸ் வலிமையை இந்த முறை கூட்டியுள்ளது.

'ஐஎஸ்எல் இந்தியாவில் கால்பந்து புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா பிளாஸ்டர்ஸ் வெளியூர்களில் ஆடும்போது ரசிகர்கள் குழு உடன் செல்வதும் அங்குள்ள கேரள மக்களின் ஆதரவு கிடைப்பதும் பிளாஸ்டர்ஸின் தனிச்சிறப்பு' என்கிறார் சோமு ஜோசப். இவர் மஞ்சப்படா (மஞ்சள் படை) எனப்படும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி பிரதான குழு உறுப்பினர்.

போட்டிகளில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் சமூக நல பணிகளிலும் ஆர்வம் காட்டுகிறது மஞ்சப்படா. இதில் ரசிகர்களின் பங்கும் உண்டு.

மைதானங்களில் ரசிகர்கள் ஆதரவு என்பது மிக முக்கியமானது. கேரளா பிளாஸ்டர்ஸ் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு பயிற்சி போட்டிக்காக சென்றபோது அங்கு கேரள மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. அவர்கள் கேரளா பிளாஸ்டர்ஸின. மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்தனர். இதனால் மைதானமே மஞ்சள் கடலாக காட்சி தந்தது.

உலகெங்கும் உள்ள மலையாளிகள் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்ஸி அணியை தங்கள் சொந்த அணியாக கருதி பெருமிதமடைகின்றனர்.